திருவாரூர், ஆக. 27 –
திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும் போது இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று திருவாரூர் அருகே பவித்திரமாணிக்க பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து விட்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தப்பின் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நீண்ட உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து அவர் நிகழ்த்திய மணமக்கள் வாழ்த்துவுரையுடன் அரசியல் பரப்புரையையும் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் எம்பி செல்வராஜும், மாநிலச் செயலாளர் முத்தரசனும் திருமண விழாவிற்கு வருகை தந்ததை சுட்டிக்காட்டி பெருமையுடன் கூறினர். மேலும் தான் இத் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் மண்ணின் மைந்தர் என்ற காரணம் ஒருபுறம் இருப்பினும், எம்பி செல்வராஜைப் பொருத்தவரை, அவர் அன்போடும், பண்போடும், பாசத்தோடும் என்னிடத்தில் மட்டுமல்ல எல்லோரிடத்திலும் பழகக் கூடியவர் என்றார்.
மேலும், நான் தமிழக முதல்வரான பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு, பல்வேறு பகுதிகளுக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. ஆனால் இந்நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் நானே மனமுவந்து தேதி வழங்கி மூன்று தினங்களுக்கு முன்பே டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேல் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றேன். மேலும் மணமக்களை வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன். எனவும், மேலும் 1975 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட எம்பி செல்வராஜ், 48 ஆண்டு காலம் கட்சியில் மக்களுக்காக உழைத்து மக்கள் தொண்டனாக இருந்து தொடர்ந்து கடமையாற்றி வருகிறார்.
மேலும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தற்போது உள்ள கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் எனவும் அதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் எனவும், இன்று சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், மேலும் இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதால்தான் வலிமையான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது அப்போது முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் நான் எப்போதும் திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன். என்ற அவர் மேலும் இப்போதும் அதே உணர்வுடன் தான் வந்துள்ளேன் என்றார். கடந்த 9 ஆண்டுகளாக மக்களுக்காக செய்த சாதனைகளை பற்றி பாஜகவால் சொல்ல முடியுமா..? எனக் கேள்வியெழுப்பிய முதலமைச்சர் தொடர்ந்து உரை நிகழ்திய அவர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கைப்பற்றி 15 லட்சம் ஒவ்வொருவருக்கும் தருவேன் என்று கூறினார். அதை அவர் நிறைவேற்றி உள்ளாரா..? எனவும், மேலும் வேலை வாய்ப்பை தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் வேலை வாய்ப்பை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்க கூடிய சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணங்களை எல்லாம் கைப்பற்றி இந்தியாவிற்கு கொண்டு வந்து, நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போறேன் என அறிவித்தார் மோடி. நான் பல கூட்டங்களில் கேட்டேன் 15 லட்சம் வேண்டாம், ஒரு 15 ஆயிரம் மட்டும் அல்லது 15 ஆயிரம் கூட வேண்டாம், 15 ரூபாய் கொடுத்தாங்களா..? என்றவாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு தருவோம் என்றார் ஆனால் செய்தார்களா…? வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது ஒன்றிய அரசை ஆளும் பாஜக ஆட்சியின் நிலைமை என்றார். மோடி எங்கு சென்றாலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அரசு விழா, வெளிநாடுகளுக்கு செல்லும் விழா குறித்த உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்தியா கூட்டணியை பற்றியும் திமுகவை பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஊழல் வந்தது என ஒன்பது வருடமாக மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஊழலை ஒழித்தே தீர்வேன் என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். “ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றவாறு அப்போது கேள்வியெழுப்பினார். ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி, லஞ்ச லாவண்யம் பெருகிவுள்ள ஆட்சியாக திகழ்கிறதென சிஏஜி அறிக்கை கூறுகிறது.
பாரத் மாதா, துவாரகா விரைவு பாதை கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணம், ஆயுஷ்மான் பாரத் திட்டம். அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், எச் ஏ எல் விமான வடிவமைப்பு திட்டம் உள்ளிட்ட ஏழு விதமான திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது, நிதியை கையாள்வதில் மோசடி நடந்திருக்கிறது என்று சிஏஜி அறிக்கை பட்டவர்த்தனமாக அறிவித்திருக்கிறது என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள 600 சங்க சாவடிகளில் ஐந்து சுங்க சாவடிகளை மட்டும் சிஏஜி ஆய்வு செய்துள்ளது. எனவும் இந்த ஐந்து சுங்க சாவடிகளில் தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்க சாவடியும் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்க சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்துள்ளார்கள். ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் இவ்வளவு என்றால் நாடு முழுவதும் உள்ள 600 சுங்க சாவடி களையும் ஆய்வு செய்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகள் நடந்திருக்கிறது என்று சிஏஜி ஆய்வு அறிக்கை சொல்கிறது.
ஊழலை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகமாக கவலைப்படுகிறார். சி வி சி அறிக்கையில் ஒன்றிய அமைச்சகத்திலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள் மேல்தான் அதிக அளவு ஊழல் புகார்கள் வந்துள்ளது என சி வி சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர்கள்தான் தற்போது ஊழலை ஒழிக்க போகிறோம் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து மக்களையும் ஏமாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.
கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இத் திட்டம் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் அல்ல. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட உண்மையான பயனாளிகளுக்கு சேர்ந்து விடும் எனவும், உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்றவாறு அத்திருமண விழாவில் திமுகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
நிறைவின் பகுதியில் எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியான திராவிடம் மாடல் ஆட்சி அமைவதற்கு காரணமாக நீங்கள் இருந்தீர்களோ அதே போல வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் வாழ்க மணமக்கள் என்று தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எ கே எஸ் விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















