திருவாரூர், அக். 06 –
திருவாரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 200 கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சிக்குட்பட்ட நான்கரை கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வட்டாரத்திற்கு 20 முகாம்கள் என்ற அளவில் மேலும் இதுப்போன்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாமின் மூலம் மாவட்டத்தில் 2 லட்சம் கால்நடைகள் பயன்பெறவுள்ளது. இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படும். இன்று நடைபெற்ற முகாமில் 556 கால்நடைகளுக்கும், 1236 வெள்ளாடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல்கரணைகள் உள்ளிடவைகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி வழங்கினார் மேலும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உடனிருந்தனர்.




















