கும்பகோணம், அக். 06 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தொடர்ந்து 7 மாதமாக நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை தலைவராக (திமுக) உள்ளுர் கணேசன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில், ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக செயல்பாடுகளில் சந்தேகம் எழும் வகையில், ஒன்றியக்குழு கூட்டம், முறையாக கூட்டப்படுவதில்லை என்றும், அப்படியே கூட்டினாலும், தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே, அனைத்து பொருட்களும், நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் நிறைவு பெற்றதாகவும் கூறி ஒன்றியத்தலைவர் காயத்ரி அசோக்குமார் வெளியேறி விடுகிறார், இதனால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை கூட்டத்தில் எடுத்து வைக்கவும், அதற்கு தீர்வு காணவும் முடிவதில்லை, மேலும் கூட்டத்தில் கொண்டு வரப்படும் பொருட்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பில்iலாமல் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேண்டுகோள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவித்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய பெருத்தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர் பாமகவை சேர்ந்த உறுப்பினர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிட தக்கதாகும், மேலும் இதனை கண்டித்து அதிமுக 7 உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அடுத்த கூட்டம் எப்பொழுது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





















