திருவேற்காடு நகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி முகாம் மற்றும் குப்பைக் கழிவுகளில் இருந்து பழைய திடக்கழிவுகளை சேகரிக்கும் தினக்கூலி தொழிளார்களை கௌரவித்து அவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
பூந்தமல்லி, அக். 01 -21 –
ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின் படி “ஆசாதி கா அம்ரிட் மகோத்ஸவ்” எனப்படும் சுகாதரம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காந்தி பிறந்த நாளான அக்.2 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் திருவேற்காட்டில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகராட்சியில் “பயன்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பயன்படுத்தக் கூடிய பொருட்கள்” குறித்த கண்காட்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில், பொறியாளர் நளினி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் சிறப்புரையாற்றினார். நகராட்சி பகுதியை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு, அவர்களது பணியின் சிறப்பு, மேலும் குப்பை கழிவுகளிலிருந்து பழைய திடக்கழிவுகளை சேகரிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் மறைமுகமாக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுவது குறித்து விளக்கிப் பேசினார்.
இந்தக் கண்காட்சியில் பயன்படுத்திய பொருட்களிலிருந்து பயன் படுத்தக் கூடிய பொருட்களை தயாரிப்பது, குப்பைகளை தரம் பிரிப்பது, கழிவு என்று ஒதுக்கக் கூடிய பொருட்களிலிருந்து எப்படி பணம் சம்பாதிப்பது, மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக்குவது, மக்காத குப்பைகளை மறு சுழற்சி, மறு பயன்பாடு செய்வது குறித்த அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
மேலும், நகராட்சி பகுதியில் குப்பையிலிருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்று அதில் வாழ்க்கை நடத்துபவர்களை அழைத்து வரப்பட்டனர். அவர்களை ஆணையர் வசந்தி பாராட்டி புதிய ஆடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் அமலேஸ்வரி மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள், நகர் நலச்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.