கும்பகோணம், நவ. 27 –
கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.
இச்சந்திப்பின் போது முத்தரசன் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கின்ற அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தங்களுடைய கட்டளைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று அந்த அமைப்புகளை இந்திய ஒன்றிய அரசு சீர்குலைக்கிறது என தெரிவித்தார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒன்றிய அரசை விமர்சித்து வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமே அதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி இருக்கிறது என்றார்.
தொடர்ந்து, அரசியல் சட்டத்திற்கும், அரசியல் சட்டம் உருவாக்கியிருக்கின்ற அமைப்புகளையும் சீர்குலைக்கின்ற அல்லது எதிர்த்து செயல்படுகின்ற போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கின்றது என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய கொள்கைகளையும், தத்துவங்களையும் செயல்படுத்துவதற்கு ஆட்சி அதிகாரங்களை தவறான முறையில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது என்றார்.
இதற்கு உதராணமாக தற்போது உச்சநீதிமன்றம் தேர்தல் அதிகாரி குறித்து நடைபெறும் விசாரணையில் கேள்வி எழுப்பி இருப்பதன் மூலமாக அது உறுதிபடுத்தப்படுகிறது என்றார்.
மேலும், பாஜக தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கின்ற பணம் மீட்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், மேலும், தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏறத்தாழ ஒன்னேகால் ஆண்டுகள் போராட்டம் நடத்தியும், 700 நபர்களை பலி கொடுத்த பின்னரே அச்சட்டத்தை ஒன்றிய அரசாங்கம் திரும்ப பெற்றது என நினைவுப்படுத்தினார்.
மேலும் அச்சட்டத்தை திரும்ப பெற்றபோது விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமாக விலை நிர்ணயத்திற்கு சட்டம் கொண்டு வருவது போன்ற சில வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் இதனை கண்டித்தும், நிறைவேற்றும் வகையிலும் இன்றைய தினம் இந்தியா முழுவதும் அனைத்து ஆளுநர் மாளிகையையும் நோக்கி விவசாயிகள் மாபெரும் பேரணியை நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் சென்னையிலும் பிரம்மாண்டமாக பேரணி நடைபெறுகிறது என்றும், பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர் கட்சிகள் ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை தவறாக பயன்படுத்தியும், ஆளுநர் மூலமாகவே அங்கு ஆட்சி செய்யும் அரசாங்கத்திற்கு போட்டி அரசாங்கத்தை ஏற்படுத்துகிற மிக மோசமான ஜனநாயக விரோத கொள்கையை பிஜேபி பின்பற்றுகிறது என்றார்.
அதுப்போன்ற நடவடிக்கைகளை பின்பற்றும் தமிழக ஆளுநர் ரவி சனாதானத்தை பின்பற்றியும், ஆதரித்தும் பேசி வருகிறார் என்றார். சனாதானம் தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது என்ற கருத்தையும் தெரிவித்து இருக்கிறார் என்றும், காரல்மார்க்ஸ் தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார் என்ற அர்த்தத்தில் ஆளுநர் கருத்துக்களை தெரிவித்து போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்.
மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசியும், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அதன் மூலம் சர்ச்சையை எழுப்பி வரும் ஆளுநரை மோடி அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது எனத்தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்தவதற்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தற்போது அறிவித்துள்ளதில் ஆதார் எண் இணைப்பு வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் மின் கட்டணமே செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே இது குறித்து அரசு பரிசீலனை செய்து கால அவகாசம் அளித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் செயல்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் எண் இணைக்கப்படாத நிலையில் வாக்கு இல்லை என்ற மோசமான நிலை உருவாகும். எனவே இது குறித்தும் அரசு கவனம் செலுத்தி தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் ஆதார் எண் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது வெகுவாக வாக்காளர்களை குறைப்பதற்குரிய ஒரு சதி நடைபெறுகிறதோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தேர்தல் ஆணையம் மறுபரிசலனை செய்ய வேண்டும்
என்றும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக சாகுபடி மற்றும் குடியிருப்புமனைகள் உள்ளது. இதில் குடியிருப்புமனைகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் சதுர அடி கணக்கு அதிகமாக நிர்ணயித்த காரணத்தால் குடியிருப்பவர்கள் ஏராளமான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கும், அமைச்சரிடமும், தமிழக அரசிற்கும் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விண்ணப்பங்கள் அளித்துள்ளோம் என்றும், இதனை முறைப்படுத்துவதற்காக தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விரைவாக தனது அறிக்கையை தர வேண்டும் என்றும்,
சாகுபடி நிலங்களில் சாகுபடி செய்யும் தமிழ்நாடு முழுவதும் உள்ள குத்தகை விவசாயிகளுக்கு கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பின் போது குத்தகையை தள்ளுபடி செய்வது கடந்த கலைஞர் ஆட்சியில் இருந்தது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் எந்த குத்தகையையும் தள்ளுபடி செய்யவில்லை. ஆகவே பாக்கியுள்ள குத்தகைகளை காரணம் காட்டி குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றக்கூடிய மோசமான போக்கை அதிகாரிகள் ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இதனை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளுக்குரிய குத்தகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள தமிழ்நாடு ஏ ஐ டி யு சி மாநில மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும், குறிப்பாக தொழிலாளர்கள் ஏறத்தாழ நூறாண்டு காலங்களாக போராடி பெற்ற உரிமைகள், சலுகைகள், சட்டங்கள் அனைத்தும் இன்றைய ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டும், 44 சட்டங்களையும் 4 தொகுப்புகளாக சுருக்கிவிட்டார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டங்களும் நடைபெற்று உள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசு அதன் போக்குகளை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை என்றும், இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசு மேற்கொள்ளாமல் அதிகாரிகளே மேற்கொள்கின்றனர் என்றும், எக்காரணத்தை கொண்டும் ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது எனவும், அமல்படுத்த கூடாது எனவும் வலியுறுத்தி இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாட்டில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதற்கான இயக்கங்களும், போராட்டங்களும் தீவிரமான முறையில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பெய்த கன மழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக முதல்வர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் போதுமானது அல்ல. இதனை அதிகரித்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முதல்வரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளோம். இதனை அரசு பரிசளித்து வழங்கும் என கருதுகின்றோம் என்று கூறினார்.
இந்த சந்திப்பின்போது மாநில துணை செயலாளர் பெரியசாமி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி, தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





















