கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி தினகரன், பல்வேறு சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய உலோக சிலைகளை துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கும்பகோணம், செப். 30 –
பல்வேறு திருக்கோயில்களில் உள்ள உற்சவர் உலோக சிலைகள் பல, பாதுகாப்பு கருதியும், அது போலவே, சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பல நூறு திருக்கோயில் சுவாமி சிலைகளும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 24 மணி நேர தொடர் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி தினகரன், துறை அலுவலர்களுடன் இன்று இந்த உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது,
சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்திடவும், மேலும் இதுவரை மீட்கப்படாமல், வெளிநாட்டில் உள்ள சிலைகளை விரைந்து மீட்கவும், துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இதற்காக இன்று நாகேஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும், இங்கு பல கோயில்களில் திருடப்பட்ட சுவாமி சிலைகள் மீட்கப்பட்டு இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அது போலவே வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, இதுவரை எந்த கோயிலுக்குரிய சுவாமி சிலைகள் என கண்டறியப்படாத சிலைகளும் உள்ளது என்றும் அது குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் நேற்று இது போல பந்தநல்லூர் பசுபதீஸ்வரசுவாமி கோயிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட இருசிலைகள் தற்போது டெல்லியில் உள்ளது அதனை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.