மீஞ்சூர், ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரூபேஷ் அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில். பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய ரூபேஸ், நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அம் மின் கம்பத்தில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸ்சின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது,
அதில் அவர் மின்சாரம் தாக்கி தரையில் விழுந்தவர் உயிருக்கு போராடிய நிலையில், அப்பகுதியில் உள்ளவர்கள் ரூபேசை மீட்டு 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த உதவி மருத்துவர்கள் ரூபேஷ் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
அதனைக் கேட்டறிந்த உறவினர்கள் கதறியபடி கூச்சலிட்டவாறு அதே வண்டியில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்றனர்.
மேலும் இத்துயர சம்பவத்திற்கு உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்த காரணத்தினால் தான் அதிலிருந்து மின்சாரம் தாக்கி ரூபேஸ் உயிரிழந்துள்ளார் என குற்றம்சாட்டி பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து மாலை 7 மணி அளவில் மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர், பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, உள்ளிட்டவர்கள் கிராமத்தின் முக்கிய நிர்வாகிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பேச்சு வார்த்தைக்கு பின்பு அவர்களிடையே சமாதானம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இத்துயரச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.























