ஆவடி, ஜூன். 12 –
திருநின்றவூர் அருகே உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஆலத்தூர் கிராம தேவதை அருள்மிகு தும்பகாளியம்மன் ஆலய மகா புனித நீராட்டு குடமுழுக்கு விழா தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 70 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை அருள்மிகு தும்பகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக கோவில் புனரமைக்க படாமல் இருந்து வந்தது. அதனை ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா மேகநாதன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் இணைந்து பல லட்சங்கள் செலவழித்து கோவிலை புனரமைத்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் புதிதாக வண்ணம் பூசப்பட்டு, கோவில் விமானங்கள் அலங்கரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து யாக குண்டகங்கள் கட்டப்பட்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. மேலும் திருக்குட நன்னீராட்டுக்கு கும்பங்கள் பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று காலை சரியாக 9 மணிக்கு துவங்கி 10 குள்ளாக திருக்குட நன்னீராட்டு புனித குடமுழுக்கு விழாவில்
புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அருள்மிகு ஆலத்தூர் கிராம தேவதை தும்பகாளியம்மன் முருகப்பெருமான், மற்றும் ராஜ கோபுரம் ஆகியவற்றில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசங்களுக்கு புனிதநீர் சிவ ஆகம முறைப்படி தமிழ் வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்பொழுது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி எனும் தொடர் முழக்கங்களை முழங்கினர். அப்பொழுது வானத்தில் கருடன் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த குடமுழுக்கு விழாவில் ஆலத்தூர், மேட்டு தும்பூர், பள்ள தும்பூர்,எடபாளையம்,முள்ளங்கி பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் சிறப்பாக முறையில் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, செந்தாமரை, மனோகரன், பக்தன், அருள், ஆறுமுகம் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பட்டாபிராம் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


















