குடவாசல், டிச. 21 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருக்கொடியலூரில் அமைந்துள்ள புராதன சிறப்பு மிக்க ஸ்தலமான ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலயத்தின் தனி சன்னதியில் அனுக்கிரக முர்த்தியாக ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.
மேலும் ஸ்ரீசனிஸ்வர பகவான் பிறந்த ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது இவ்வாலயம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயத்தில் சனி பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
நவக்கிரகங்களில் சனிக்கும், குருவிற்கும் ஒரு தனி இடம் உண்டு. அதன்படி இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பகவான் ஜோதிட ரீதியில் உள்ள 12 ராசிகளில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆகும் நாளை சனி பெயர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.
அதன்படி நேற்று மாலை 5.20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். சனீஸ்வர பகவான் பெயர்ச்சி அடைவதற்கு முன்னதாக சனீஸ்வர பகவான் சன்னதியில் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டி சனி பீர்த்தி மகா ஹோமம் நடைபெற்றது. அதனை அடுத்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், சந்தனம் முதலான வாசனை திரவியப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாரதனையும் நடைபெற்றது.
இதில் சனி பெயர்ச்சி அடைந்த ராசிக்காரர்கள் மற்றும் கடகம் , சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிக்காரர்கள் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் நீக்கிட வேண்டி பரிகார பூஜை செய்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டனர். இதில் வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.























