சென்னை:

அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். அ.தி. மு.க.- பா.ஜனதா கூட்டணியை சமீபத்தில் சரத்குமார் விமர்சித்து வந்தார். இந்த நிலையில் அவர் விஜயகாந்தை சந்தித்ததால் பரபரப்பு நிலவியது.

விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது அன்பு சகோதரர், இனிய நண்பர் விஜயகாந்தை சந்தித்து விட்டு வருகிறேன். உடல் நலமில்லாமல் இருந்த அவரை சந்திக்க நான் நியூயார்க் வருகிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் அங்கு வர வேண்டாம். இங்கே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

எனவே இன்று காலை சந்திக்க வந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்கிறேன். அவர் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களில் நானும் ஒருவன். அவர் நலமாக இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வலிமை பொருந்தியவராக தெரிகிறார். அதனால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இருவரும் அரசியலை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் நிலவரத்தை பற்றி பேசினோம். அவருடைய கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டேன். என்னுடைய கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். ஆனால் விஜயகாந்த்தான் முடிவு எடுக்க வேண்டும்.

எனது பார்வையில் இப்போது அரசியல் எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்று அவருடன் பகிர்ந்து கொண்டேன். கூட்டணி என்பது அவரது கட்சி முன்னோடிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்கள் முடிவில் தலையிட நான் வரவில்லை. ஆனால் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

நான் கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியா? என்பதை 5-ந்தேதி அறிவிப்பேன். 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி:- ரஜினியும், கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விஷால் கூறி இருக்கிறாரே?

பதில்:- நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் பெரிய அரசியல் வாதிகளுக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.

கே:- இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ப:- இந்த தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் என்றைக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுகிறார்களோ அன்றைக்கு நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள்.

கே:- அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு மாற்றாக கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறீர்களா?

ப:- ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கே:- டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசினீர்களா?

ப:- நான் குழு அமைத்து இதுவரை யாரிடமும் பேச வில்லை. என்னிடம் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பல இயக்கங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் தி.மு.க. வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்து அதன்பிறகு சொந்த கட்சி நடத்திக் கொண்டு ஒரே நிலைப்பாட்டில் இருந்தவன். நான் பல நண்பர்களை சேகரித்து வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னிடம் நட்பு பாராட்டுவதால் இங்கு இருங்கள், அங்கு இருங்கள் என்று சொல்லலாம்.

கே:- உங்களிடம் நிறைய பேர் பேசுவதாக கூறினீர்கள். யாருடன் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது?

ப:- நான் பேரம் பேசுகிற நபர் இல்லை. பேரம் பேசி இவ்வளவு சீட் கொடுங்கள், பணம் கொடுங்கள் என்று கேட்கப் போவதில்லை. மற்றவர்கள் அப்படித்தான் கேட்பார்களா என்று அடுத்த கேள்வி கேட்டு விடாதீர்கள். அது எனக்கு தெரியாது.
சொல்வதை வைத்துதான் நானும் பேசுகிறேன். என்னை பொறுத்தவரை நிறைய திட்டுகிறவர்கள் ஒன்று சேரும்போது மனசாட்சி எப்படி ஒத்து போகும் என்று தெரியவில்லை. இளைஞர்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று நினைக்கையில் இந்த மாதிரி கூட்டணி அமையும்போது எப்படி அவர்கள் அரசியலை பார்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

கே:- திராவிட கட்சிகளுடன் கூட்டணியே இல்லை என்று சொன்ன பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதே?

ப:- அதை டாக்டர் ராமதாசிடம்தான் கேட்க வேண்டும். இவர்தான் சிறந்த கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம்.

கே:- காஷ்மீர் சூழ் நிலையை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறதே?

ப:- அதை அரசியல் செய்வதாக பார்க்கவில்லை. இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இதில் அரசியல் பேசக்கூடாது. அபிநந்தன் விடுதலையாகி வந்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய மதிப்பு. அவர் சிறந்த வீரர். அவர் வீரச்செயலும், பேசிய விதமும், மனஅழுத்தம் இருந்த நிலையிலும் அமைதியாக பதில் சொன்னதை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here