திருவண்ணாமலை, செப்.27–
திருவண்ணாமலை மண்டி தெரு அருகில் உள்ள வாணிய தெருவில் உள்ள ஒரு லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருவண்ணாமலை மாவட்ட நியமான அலுவலர் ராமகிருஷ்ணன், மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா, கலேஸ்குமார், சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை போத்தராஜா தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அதிகாலையில் பெங்களூருவில் இருந்து பல்வேறு குடோன்களுக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 5 பண்டல்கள் சாலையோரம் கிடந்து உள்ளது.
இதில் இருந்த பதிவு எண்ணை கொண்டு அந்த பண்டல்கள் சம்பந்தப்பட்ட லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் பண்டல்களை பார்வையிட்ட போது, அதில் குட்கா பொருட்களின் வாசனை தெரியாமல் இருக்க ஊதுவத்திக்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த குட்கா பொருட்கள் இருந்த 5 பண்டல்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட லாரி சர்வீஸ் அலுவலக உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விளக்கம் கேட்டு உள்ளனர். உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் திருவண்ணாமலை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.