ராமநாதபுரம், செப். 16- ராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, என, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப் அலி மற்றும் சேர்மன் சாகுல்ஹமீது ஆகியோர் திறப்பு விழாவில் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக ஐடி நிறுவனமான எஸ்.இன்போ டெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறப்பு விழா நடந்தது. இந்தியா, மலேசியா, தாய்லாந்து, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில் நுட்பம், தீ தடுப்பு உபகரணங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாடு, ஜவுளி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் எல்லை விரித்துள்ள சிராஜ் குரூப் பிரைவேட் லிமிடெட்., அதன் குழும நிறுவனமான எஸ் இன்போடெக் திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடந்தது. விழாவில் ராமநாதபுரம் ராஜா பாபு சண்முகநாத சேதுபதி தலைமை வகித்தார்.
சிராஜ் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் ஏ.சாகுல் ஹமீது, மலேசியா சிராஜ் குரூப் ஆப் கம்பெனி இயக்குநர் டி.முகமது ஹனீப் , தாய்லாந்து, பாங்காக் பெட்செட் ஜெம்ஸ் நிறுவனத்தின் சேர்மன் எஸ்.கியாசுதீன், சேலம் சண்முகா மெடிக்கல் ரிசர்ஜ் பவுண்டேஷன் டிரஸ்ட் சேர்மன் டாக்டர் பி.எஸ். பன்னீர் செல்வம், பட்டிமன்ற பேச்சாளர் ஜெ.சுல்த்தானா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிராஜ் குரூப் ஆப் கம்பெனி மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ்.முகமது யூசுப் அலி வரவேற்றார். மலேசியா தொழிலதிபர் டாக்டர் முகைதீன் அப்துல் காதர், ராமநாதபுரம் ஆசி மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன், தொழிலதிபர்கள் டாக்டர் ரீடு செல்வம் (அரியலூர்), புகழேந்தி (சேலம்), ஸ்டீபன் (நாகர்கோவில்), ரகுபதி (கோவை), ஏ.ஆர்.துல்கீப் கான் (சித்தார்கோட்டை), எம்.மன்சூர் அலி கான் (கீ நெட்வொர்க்), சேலம் பெஸ்ட் பிசினஸ் கம்பெனி சேர்மன் டாக்டர் என்.முத்துக்குமார், ராமநாதபுரம் ஆசியன் பில்டிங் மெட்டீரியல்ஸ் மேலாண் இயக்குநர் முஜிபுர் ரஹ்மான், ராமநாதபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெக தீசன், ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அ. அஸ்மாக் அன்வர்தீன், ஆடிட்டர் ஜெ.ரமேஷ் பாபு, வழக்கறிஞர் எஸ்.தேசிகன், அன்னூரி அறக்கட்டளை நிறுவனர் ஏ. அன்வர்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் இளைய மன்னர் பிரசாத் சேதுபதி நன்றி கூறினார். பிவிஎம் டிரஸ்ட் சேர்மன் தேசிய விருதாளர் வி.அப்துல் ரசாக் தொகுத்து வழங்கினார். எஸ்.இன்போடெக் நிறுவனத்தின் சேர்மன் சாகுல்ஹமீது, மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப்அலி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் 500 பேருக்கு வேலை தர தற்போது நேர்க்கானல் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறோம். இன்னும் தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் இயற்கை சார்ந்த பல தொழில்களை தொடங்க உள்ளோம். தற்போது இங்குள்ள இளைஞர்கள் சென்னை, பெங்களூரு சென்று சம்பாதிக்கும் பணத்தை வெளியூரில் தங்குவதற்கும் உணவுக்குமே செலவு செய்ய வேண்டியநிலையை மாற்றி நம் மாவட்டத்தில் சென்னை பெங்களூருக்கு இணையான வேலையை தரவேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கி உள்ளோம், என்றனர்.






















