ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கம் தலைமையில் நடந்த இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரக பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் செலவினம் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து கிராம பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல் பாரத பிரதமர் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது விவரங்களை உறுதிப்படுத்துதல் தொடர்பான வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து ஊராட்சி செயலர் அர்ஜூணன் எடுத்துரைத்தார். கூட்டத்தில் கிராம பொது மக்கள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர்.