சென்னை, மார்ச். 14 –
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும் ரூ.84.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2022) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 28 கோடியே 8 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகள் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக வளாகத்தில் 56 கோடியே 48 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடியில் 16 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 1500 பேர் அமரக்கூடிய பார்வையாளர் மாடம், மாற்றுத் திறனாளிகளுக்கான தனி இடவசதி, அலுவலக அறை, மாநாட்டுக் கூடம், கணினி அறை, விளையாட்டு உபகரணங்கள் அறை, உடற்பயிற்சி அறை, மருத்துவ உதவி அறை, பயிற்சியாளர் அறை, விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கும் அறை, உடை மாற்றும் அறை, சமையல் அறை, உணவு அருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகம்;
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் விளையாட்டரங்கத்தில் 3 கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து ஆடுகளம் கையுந்து பந்து மைதானம், இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம். நடைபாதை மற்றும் உடற்பயிற்சிக் கூடம்:
சென்னை – ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தின் அருகில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் 7 கோடியே 94 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில், 150 மாணவியர்களுக்கான தங்குமிட வசதி, பயிற்றுநர் அறை, விளையாட்டு உபகரணங்கள் அறை, சமையல் அறை, உணவு அருந்தும் கூடம், மாணவிகளுக்கான கலந்தாய்வு கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான புதிய விளையாட்டு விடுதி;
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 13 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம், 12 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேசைப் பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம், 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான விடுதி, 13 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உயிர் இயந்திரவியலுக்கான முதன்மை நிலை மையம், 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய களரிப்பயட்டு மற்றும் சிலம்பத்திற்கான பயிற்சி மையம், 51 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் முகாம் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், சமையல் அறை மற்றும் இருப்பு அறை, 73 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் என மொத்தம் 84 கோடியே 57 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர். இரா. ஆனந்தகுமார், துணைத் தலைவர்கள் என். ராமச்சந்திரன், டாக்டர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.சுந்தர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.