செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு உட்பட பல கட்ட புலன் விசாரணையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணம், செப். 12 –
கும்பகோணம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜபருல்லா வயது 38 இவருக்குச் சொந்தமான மருந்துக் கடை மயிலாடுதுறை சாலை, செட்டிமண்டபம் பகுதியில் பிஸ்மி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
சம்பவ நாளன்று அதாவது, வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், இன்று காலை ஜபருல்லா நண்பர் சையது இப்ராஹிம் அவ்வழியே சென்ற அவர், பூட்டப் பட்டிருந்த மருந்துக்கடையின் கதவு, பாதி அளவு திறந்திருப்பது கண்டு திடுக்கிட்டு இது குறித்து உடனடியாக ஜபருல்லாவிற்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் ஐம்பதாயிரம் கொள்ளை போனது குறித்து அதிர்ச்சியுற்று, இக் கொள்ளைச் சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் பதிவான கைரேகை பதிவுகளை ஆய்வு செய்ய தஞ்சையில் இருந்து வருகை தந்த தடயவியல் பிரிவினர் சேகரித்தனர். பின்பு சிசிடிவியின் பதிவுகளையும் ஆய்வு செய்த தில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் இந்த கொள்ளை நடவடிக்கையில் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தொடர் புலன் விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக வணிக நிறுவனங்களில் இரவு நேரங்களில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்கள் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் நகரில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்த போதும், அவற்றில் பல செயல் படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வியாபாரிகள் மத்தியில் எழுவதும் தவிர்க்கப் படுவதற்கில்லை, இதன் காரணமாக இத்தகைய திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடைபெறுகிறது எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.