திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்படாமல் நிலுவையில் இருந்த வீடுகள் கட்டும் பணிகள் அதே ஊராட்சியில் 15வது நிதிக்குழுவில் பக்கக்கால்வாய் அமைக்கும் பணி ஆர்ப்பாக்கத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் மேநீர் தேக்கத் தொட்டி பணி, பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.1கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
இப்பணிகளை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வள்ளிவாகை ஊராட்சியில் (வேடியப்பன் கோவில் அருகில்) மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் மரக்கன்றுகள் நட்டு துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) கருணாநிதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பா.விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கே.பி.மகாதேவன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் அருணா, ரவிச்சந்திரன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி ஜானகிராமன், வள்ளிவாகை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகுமார், ஊராட்சி செயலாளர் கார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.