திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 20 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, கடனுதவி, தொகுப்புவீடு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் தங்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்கக்கோரி திருவண்ணாமலை கோட்டாட்சியருக்கு மனு அளித்திருந்தனர்.
இதையட்டி ஜாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த குண்டாள், பானுமதி, பாலமுருகன், உள்ளிட்ட இருளர் இன மக்கள் வீடுகளுக்கு சென்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்குவதற்காக நேற்று விசாரணை மேற்கொண்டார். அப்போது இருளர் இன மக்களிடம் ரத்த சம்பந்தமான உறவுமுறைகள், பழைய பத்திர ஆவணங்கள், ஏற்கனவே உறவினர்களுக்கு எஸ்.டி. சான்று வழங்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தாசில்தார் பி.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர இ.வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் அ.ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.