திருவண்ணாமலை, ஆக 1 –
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதியிலிருந்து கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் முன்னிலையில் நடந்தது.
இந்த பணியில் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868, மற்றும் 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியல் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.