திருவாரூர், அக். 01 –

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளைக் கொண்டதாகும்.  இந்நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் இன்றைய தினம் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியது முதலே காரசார விவாதம் அக்கூட்டத்தில் நடைபெற துவங்கியது. மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளதாகவும், பல இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை எனவே அவைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் ஆளுக்கொரு பிரச்சினைகளை எழுப்பினார்கள்.

இந்நிலையில் ஒருக் கட்டத்தில் திமுக மன்ற உறுப்பினர் ரஜினிசின்னா என்பவர் பேசுகையில், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என மக்கள் நம்பி வாக்களித்த நிலையில், நிதி நெருக்கடியால் திருவாரூரில் சாக்கடை கூட ஒழுங்காக ஓட வழி வகையில்லை என தெரிவித்தார். தொடர்ந்து தனது வார்டுக்கு சாலை வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அப்போது அவர் புகார் தெரிவித்தார்.

அப்போது அதற்கு பதிலளித்த நகராட்சி மேலாளர் முத்துகுமார், நகராட்சி ரூ.10 கோடி கடனில் தத்தளிக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியவில்லை எனத் தெரிவித்தார். அரசு நிதி ஒதுக்கவில்லை எனவும் மேலும் இந்நிலையில் எப்படி பணி செய்வது எனவும் ஆவேசமாக அவர் பதிலளித்தார். இதனால் ஒட்டு மொத்த நகராட்சி நிர்வாகமே செயலற்று செய்வதறியாது விழிப் பிதுங்கிதான் நிற்கிறது. என்கின்றனர் பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here