மன்னார்குடி, டிச.15 –

நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும் தமிழ்நாடு அரசு குறைத்தது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கும் போது, கருகும் சம்பா பயிரை காப்பாற்ற பிப்ரவரி இறுதிவரை தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியன் குறிப்பிட்டார்.

மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், , செங்கல்பட்டு ராணிப்பேட்டை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நடவடிக்கைகளை பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் குமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராகவும், கதிர் வந்த நிலையிலும் பயிர்கள் அழிந்தன. அப்போது ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் இடுபொருள் இழப்பீடாகவும்,கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ10லட்சம் நிவாரணமாகவும் வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு விளை நிலங்களுக்கான நிவாரணத் தொகையை 17,000மாகவும், இறந்தவர்களுக்கு ரூ 6 லட்சமாகவும் குறைத்து நிவாரணம் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது அது பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் குடும்ப அட்டைகளுக்கு ரூ 6 ஆயிரம், மழைநீரால் சூழ்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளபடி சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 40% பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை குடியிருப்புகளில் குடியிருந்து பணியாற்றி வருகிறார்கள். பெரும்பகுதியான குடும்பங்கள் தனது சொந்த கிராமத்திலேயே குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு, குடும்ப அட்டை இல்லாதவர்கள் முறையிடலாம் என்று சொல்லுவது ஊழல் முறைகேடுகளுக்கு வலியுறுத்துமே தவிர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்றடையாது என தமிழ்நாடு அரசுக்கு தான் அறிவுறுத்துவதாக அப்போது அவர் தெரிவித்தார்..

வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி  அரசே பயனாளிகளை தேர்வு செய்து நிவாரணம் வழங்கிட முன்வர வேண்டும். எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் டெல்லியில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. தேசிய அளவில் புகழ்மிக்க ஆளுமைகள் விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நான் பங்கேற்க உள்ளேன் என்றாவாறு கூறினார். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி நடைப்பெறும் அம் மாநாடு இந்தியாவில் தேசிய அளவிலான ஒரு அரசியல் பார்வையை உருவாக்கும் என்கிற நம்பிக்கையில் தான் பங்கேற்க உள்ளேன் என்றவாறு தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை வேண்டுகோளை ஏற்று நவம்பர் மாதம் துவங்கி சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி பணி துவக்கி இருக்கிறார்கள். பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவை உள்ளது.இதனை கருத்தில் கொண்டு தற்போது கருகும் நிலையில் உள்ள சம்பா பயிரை காப்பாற்று நோக்கோடும் கர்நாடகம் நமக்கு தரவேண்டிய நிலுவையில் உள்ள தண்ணீரை கேட்டு பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தெற்கு ராஜன் வாக்காளுக்கு இதுவரையிலும் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள் முதல் தண்ணீர் வழங்கவில்லை தற்போது மழையில் சாகுபடி துவங்கி கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கி இருப்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து அப்பகுதி விவசாயிகளுக்கு உடனடியாக கொள்ளிடம் கீழனையிலிருந்து தெற்கு ராஜன் மூலம் தண்ணீரை வழங்க முன்வர வேண்டும் என்றார்.

பெரியகுடி ஓஎன்ஜிசி பேரழிவுக்கு எதிராக 12 ஆம் தேதி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை டிசம்பர் 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்,சங்க நிர்வாகிகள் பங்கு கொள்ளும் சமாதான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here