கும்பகோணம், ஜன. 27 –
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கும்பகோணத்தில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் தமாகா, அதிமுக கூட்டணித் தொடரும் என்றார்.
மேலும் இக்கூட்ணிக்கு வலு சேர்க்கும் வகையில், வெல்லக் கூடிய இடங்களில் த.மா.க போட்டியிடும் என்றும், எங்களுக்கு போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை எனவும் தெரிவித்தார்.
வேதாரண்யம் மீனவர்கள் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, எனவும், இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேலும் மத்திய அரசு கடற்படை ரோந்தை தீவிரப்படுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கொரோனாவை காரணம் காட்டி கிராமசபா கூட்டங்கள் நடத்தாதது எனபது ஏற்கதக்கதல்ல, இதற்கு பதிலாக, மதுபான கடைகளை மூடி இருக்கலாம் என்றும் தெரிவித்த அவர், நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது, இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும், அதுபோலவே இத்தேர்தலில், வாக்காளர்கள், நல்லவர்களை நியாமானவர்களுக்கு, மனசாட்சிக்குட்பட்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தியாகிகள் வணக்கத்திற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் அவர்கள் பெயரில் அரசியல் செய்ய கூடாது, அது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல, அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், உண்மை வெளி வர வேண்டும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் இதனை அணுக வேண்டும், இச்சம்பவத்தில் விசாரணை முடியாது உண்மை வெளிவராத நிலையில், இது குறித்து விமர்சிப்பவர்கள், வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களாக தான் இருக்க முடியும் என்றும் ஜி கே வாசன் தெரிவித்தார்.




















