ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார்.
ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மோகன்(47). இவர் ஜூன் 2ஆம் தேதி மதியம் குளிக்கச் சென்று விட்டு வீடு திரும்பியபோது கண்மாயில் சவடு மண் அள்ளுவதை மோகன் உள்பட 6 பேர் தட்டிக்கேட்டனர். இது தொடர்பான தகராறில் மோகன் கொல்லப்பட்டார். மோகனின் மைத்துனர் பத்மநாதன் புகாரில் ஜெய் பாரத், ஆனந்த், கார்த்தி, ஹரீஷ், முனியசாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இது குறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் 2 மதியம் குளித்து விட்டு திரும்பியபோது மோகன் உள்பட 6 பேர், சவடு மண் அள்ளும் புழுதிகுளம் கண்மாய் சென்றனர். அங்கிருந்த ஹரிஷ் உள்பட இருவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான தகராறில் உருட்டு கட்டையால் தாக்குதலில் காயமடைந்த மோகன் தரப்பினர் தப்பி ஓடினர். இதன் பின்னர் செல்போன் அழைப்பின் படி, ஹரிஷ் தரப்பைச் சேர்ந்த சிலர் 2 வாகனத்தில் அங்கு வந்தனர். தப்பி ஓடி சகதியில் சிக்கிய மோகன் முகத்தை மணலில் அமுக்கி உள்ளனர். இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய மோகனை வாகனத்தில் ஏற்றி வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளனர். சிகிச்சைக்கு மோகனை எடுத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டார். அவரது தலை, வயிறு பகுதியில் காயம் உள்ளது. தாக்குதலில் காயமடைந்த 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொலையில் தொடர்புடைய ஆனந்த் ராஜ் என்பவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கொலை கும்பலை தேடி ராமநாதபுரம் டிஎஸ்பி., நடராஜன் தலைமையில் தனிப்படை சென்னைக்கும், இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை காஞ்சிபுரம் விரைந்துள்ளனர். கேணிக்கரை இன்ஸ்பெக்டர், தீவிர குற்றத் தடுப்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர், என்றார்.