திருவண்ணாமலை அக். 21 –
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உபரி நீர் கால்வாய் அமைக்கப் பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன, நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால், சேரியந்தல், நொச்சிமலை, நாச்சிப்பட்டு, கீழ்நாத்தூர் ஆகிய ஏரிகளும் நிரம்பி வருகிறது, அதனால் இந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வேங்கிக்கால் ஏரியிலிருந்து சேரியந்தல் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1500 மீட்டர் ஆகும். ஆனால் வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் சேரியந்தல் ஏரியை சென்று அடையா வண்ணம் ஓடையும், கால்வாயும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால் ஏரி நிரம்பி வெளியேறும் நீர் சிறிது தூரம் வரை கால்வாய் வழியாக சென்று அதன் பிறகு வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் கால்வாய் தூர் வாரும் பணிகளை சிறிது தினங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, வேங்கிக்கால் ஏரி தண்ணீரை மாற்று பாதை அமைத்து அதன் வழியாக சேரியந்தல் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி புதியதாக 10 அடி அகலத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும், துர்க்கா நகர் வழியாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அவரிடம், குடியிருப்புவாசிகள் துர்க்கா நகரில் டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையின் மீது கால்வாய் வெட்டப்பட்டிருப்பது குறித்து புகார் தெரிவித்தனர். இது குறித்து குடியிருப்புவாசிகள் தரப்பில் கூறுகையில், கால்வாய் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த கால்வாயை கோயில் இடத்திலும், குடியிருப்புகள் பாதிக்காத வண்ணமும் அமைக்க கோருகிறோம்.
இந்த கால்வாய் அமைக்கப்பட்டால் பத்மாவதி நகர், துர்க்கா நகர், துளசி நகர், பொன்னுசாமி நகர், ஓம் சக்தி நகர் வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.