ராமநாதபுரம், அக். 14- இராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர் சங்க 4 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பாரிராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது ஜக்கரியா வரவேற்றார்.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி, செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் பேசினர். புதிய விற்பனை நிலையம் அமைப்பதில் உள்ள இடையூறுகள், சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முத்து முருகன் நன்றி கூறினார். தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறுகையில், பெட்ரோல் நிலையங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோரை ஜாமீனில் வரமுடியாத அளவிற்கு தண்டிக்கும் சட்ட விதியை உரிமம் சான்றில் சேர்க்க வேண்டும், சாலை ஓரங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அருகே புதியதாக அமையவுள்ள பெட்ரோல் நிலையங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க உரிம விதிகளில் வழிவகை செய்ய வேண்டும், பெட்ரோல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.