புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ் டி.ஐ.ஜி. அமித் குமார் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் டிஐஜியை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.