பழவேற்காடு, செப். 05 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று பொன்னேரி கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று ஊத்துக்கோட்டை ஆமிதா நல்லூர், மீஞ்சூர், பொன்னேரி புலிகுளம், பெரியபாளையம், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பழவேற்காடு லைட் ஹவுஸ் மற்றும் சாட்டான் குப்பம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைக்கும் போது கடலில் பக்தர்களுக்கு விபத்து ஏற்படாத வகையில் ட்ரோன் கேமரா மூலமும், மீன்பிடி படகுகள் மூலமும், மற்றும் உயர் கோபுரம் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பொன்னேரி தீயணைப்பு துறை அலுவலர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு துறையினர் கடற்கரையில் மீட்பு பணிக்கு தயாராக இருந்தனர். வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பாதுகாப்பு பணியில் திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான காவல்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.