கும்பகோணம், மார்ச். 31 –
கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் சனி பெயர்ச்சியைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில், அத்திருக்கோயிலில் உள்ள மங்கல சனிபகவானுக்கு திருக்கல்யாணம் இன்றிரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் சனீஸ்வரர் கடந்த 29ம் தேதி அதிகாலை 1.06க்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இச்சனிப் பெயர்ச்சியை முன்னிட்டும், உலக நன்மையடைய வேண்டியும் மங்கல சனீஸ்வரர் சன்னதியில் விசேஷ ஹோமமும், அதனை தொடர்ந்து மங்கல சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் பிறகு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இரு மனைவிகளுடன் இரு மகன்களுடன் குடும்ப சகிதமாக மங்கள சனீஸ்வரராக அருள் புரியும் சனீஸ்வரருக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வர வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க சனீஸ்வர பகவான் மந்தா தேவி மற்றும் ஜேஷ்டா தேவியுடன் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக இன்றிரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இத்திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


















