பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அம் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.
பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு பொது நல மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ வசதிகள் சிறப்பாக இருந்தமைக்காக மத்திய அரசின் தேசிய அளவிலான விருது மற்றும் மகப்பேறு சேவைக்கான லக்ஷயா எனப்படும் விருதுகளும் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் மருத்துவமனையில் கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உரிய நேரத்தோடு கவனித்து அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பயனடைந்துள்ளனர்.
மேலும் அம்மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டு பெரும்பாலான நோயாளிகள் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகளை சிறப்பாக செய்தவர்களுக்கு மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பி.கே.அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பாக மருத்துவப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவ உபகரணங்களை கையாளுபவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் பொன்னேரி அரசு மருத்துவமனை ஏற்பாட்டில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை அலுவலர் அசோகன் மருத்துவமனைக்கு எவ்வாறு விருதுகள் கிடைத்தது என்பதற்கான விளக்கத்தையும் மருத்துவமனையில் தற்போதுள்ள செயல்பாடுகள் குறித்தும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



















