கும்பகோணம், ஜன. 25 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை அரசு தலைமைக் கொறடா கோவி செழியன் துவக்கி வைத்து சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுகரசு ஒன்றிய துணைத் தலைவர்கள் கோ.க அண்ணாதுரை கருணாநிதி ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் ஊராட்சி செயலாளர் மாணிக்கம் கந்தசாமி கால்நடை மருத்துவர்கள் ஆனந்தகுமார் செல்வம் கால்நடை ஆய்வாளர் பிரபாகரன் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ரவி செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கால்நடை மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு முகாமில் குடற்புழு நீக்கம், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல், செயற்கை முறையில் கருவூட்டல், சினைப் பரிசோதனை, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மலட்டு நீக்கம் சிகிச்சை, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி தீவனப் பயிர் மற்றும் தீவனப் புல் சாகுபடி விளக்கம் சிறு அறுவை சிகிச்சை சிறு கண்காட்சி மண்டல ஆராய்ச்சி மையத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்துக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்கள். இந்த முகாமில் 200 மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.





















