காஞ்சிபுரம், ஆக. 07 –
காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப் பிப்பதற்காக ஓட்டு வீட்டின் சுவரின் அடிப்பக்கத்தில் சுதர்சன் இடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் சுதர்சன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலுசெட்டி காவல்துறையினர் உயிரிழந்த கல்லூரி மாணவன் சுதர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கல்லூரி மாணவன் தாய் சரஸ்வதி, விவசாயம் செய்து வருகின்றார். உயிரிழந்த சுதர்சனுக்கு, இரண்டு தம்பிகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுமுறை தினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















