கும்பகோணம், பிப். 27 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தானியக் கடன் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சத்திற்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்துள்ளதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர், மருந்தாளுநர் ஆகிய இருவரை பொருளாதார குற்ற புலனாய்வுதுறை ஆய்வாளர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே பாபநாசம் வடக்கு வீதியில் பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் அமைந்துள்ளது. இச்சங்கத்தில் கும்பகோணம் கும்பேஸ்வரன் தெற்கு வீதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 56) என்பவர் கூட்டுறவு செயலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இச்சங்கத்தில் தென் சருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 35) என்பவர் கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 01.04.2017 முதல் 19.08 2019 வரை மருந்து கொள்முதலில் இருப்பு குறைவு, மருந்து தொகை வழங்கியதில் முறைகேடு, தானிய கடன் வசூலில் முறைகேடு ஆக மொத்தம் ரூ. 34 லட்சத்து 41 ஆயிரத்து 761 முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கும்பகோணம் கூட்டுறவு துணை பதிவாளர் அட்சய பிரியா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர்கள் ரத்தினகுமார், நந்தகுமார், சுரேஷ் ஆகியோர் முறைகேடு வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன், மருந்தாளுநர் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் சிவகுமார் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதில் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மருந்தாளுநர் ராஜேஸ்வரி திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















