புதுச்சேரி, மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும் அச் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் மற்றும் சாட்சி ஆவணங்களும், பிரேத பரிசோதனையின் போது மருத்துவ பரிசோதனையில் கைப்பற்றப்பட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகியோரிடமிருந்து ரத்த மாதிரிகளும் சேரிக்கப்பட்டது.

இவை புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தடய அறிவியல் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இது 55 நாட்களுக்கு பிறகு இறுதி செய்யப்பட்டு ஆய்வு அறிக்கையாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி  ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, குற்ற பத்திரிகை  தாக்கல் செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. சிறுமி கடத்தல், உடல் மறைப்பு வரையிலான சம்பவங்கள் தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகள், குற்றவாளிகள் நாடகமாடிய போது உடனிருந்த சாட்சிகள் என 80 சாட்சிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் சாட்சிகள்  அளித்துள்ள வாக்குமூலங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டு முக்கிய  ஆதாரங்களாக  குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் ரத்த ஆடைகள், சடலத்தில் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகள், குற்றவாளிகளின் ரத்த மாதிரிகள், ஆண்மை பரிசோதனை அறிக்கை, டிஎன்ஏ அறிக்கை ஆகியவை தடயவியல் துறையின் ஆய்வு அறிக்கையுடன் போஸ்கோ நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல், அடைத்து வைத்தல், பலாத்காரம் செய்தல்,கொலை, சாட்சிகளை அழித்தல், எஸ்.சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், போஸ்கோ  உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை டிஜிபி சீனிவாசன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு எஸ்பி கலைவாணன் கிழக்கே காவல் கண்காணிப்பாளர் லஷ்மி சௌஜன்யா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குற்ற பத்திரிக்கை இணைய வழியே போக்சோ நீதிமன்றத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பதிவேற்றம் முடிந்த நிலையில் எஸ்,பி  லஷ்மி சௌஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய SP லஷ்மி சௌஜன்யா, சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here