புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆப்ரேஷன் விடியல் என்கிற பெயரில் போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதே போல் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பெரிய கடை போலீசார், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் யாரேனும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அதே போல் பொது இடங்களில் மது அருந்தினாலோ உடனடியாக காவல் நிலைய அதிகாரிகளை அவர்களது செல்போஃன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றும் அப்படி தெரிவிப்பவர்களின் அடையாளங்கள் ரகசியம் காக்கப்படும் என்று அச்சடிக்கப்பட்ட வேண்டுகோள் பதாகைகளை கடற்கரை சாலை, ரெயின்போ நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட நகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வைத்தனர்.






















