அகமதாபாத்:

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த திட்டத்தின்கீழ், விவசாயக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், காலணித் தொழிலாளர்கள்,முடி திருத்துவோர், தையல் தொழிலாளர்கள், ஓவியர்கள், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் தூய்மைப் பணிபுரியும் துப்புறவுத் தொழிலாளர்கள், உலாமாக்கள், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள், அச்சக தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், பொற்கொல்லர்கள்
திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். 18 வயதில் சேருபவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்துக்கான பிரிமியம் தொகையாக மாதம் 55 ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசும் தனது பங்களிப்பாக 55 ரூபாயை இந்த கணக்கில் செலுத்தும்.

தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் சேரும் வயது அதிகரிக்க, அதிகரிக்க பிரிமியம் தொகையும் அதிகரிக்கும். அதற்கு நிகராண தொகை மத்திய அரசின் சார்பில் செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்கள் 60 வயது நிறைவடையும் போது மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காப்பீட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி பங்கேற்றார்.

இதேபோல், நாட்டின் பிறபகுதிகளில் மத்திய மந்திரிகள் அந்தந்த மாநில முதல் மந்திரிகளும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here