திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி அவர்கள் பொது மக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் (25.10.2021) கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடமிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் நேரில் பெற்றுக் கொண்டார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 538 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பல்வேறு குறைகளை விண்ணப்பங்களாக பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து உடனடியாக 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.540 மதிப்பிலான அக்குள் கட்டையும், 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.6400 மதிப்பிலான சக்கர நாற்காலியும், 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.6300 மதிப்பிலான தையல் இயந்திரமும், ஆகமொத்தம் 3 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.13,2400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.