சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா விற்று வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை, டிச. 12 –

சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன் தலைமையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கனகதாசன் மற்றும் உதவி ஆய்வாளர் திருவுநாவுக்கரசு, முதல்நிலை காவலர் ரவி வர்மன், காவலர்கள் அருண், நரேஷ் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மடிப்பாக்கம் கூட்டு ரோடு சாலையில் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது சுமார் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கங்கேஷ்வர் என்பதும் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் ரயில் மூலம் கஞ்சாவை ஒரிசாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மடிப்பாக்கம் போலீசார் கங்கேஷ்வர் மீது வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here