மாஸ்கோ:
ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ராணுவம் குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அந்த வகையில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
எனினும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா, இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ‘ஸ்மார்ட்போன்’ மட்டும் இன்றி ‘லேப்-டாப்’ ‘டேப்லட்’ உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும். அத்துடன் அவர்கள் ராணுவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும்.