கும்பகோணம், டிச. 23 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும், பரமபத வாசலை கடந்து வந்தும் உளம் மகிழ்ந்தனர்.

திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப்பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும் இத்தலத்தில் சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார், காவிரி நதி மூவாயிரம்  தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுகத்தில் தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போல பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், மேலும் இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வரம் பெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும், 108 வைணவ தலங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமெனவும் தெரிய வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில்,  வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது, இதனையொட்டி, பெருமாளின் பத்து அவதாரங்களை விளக்கும் உற்சவ மூர்த்திகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

தொடர்ந்து சாரநாதப்பெருமாள் சர்வ அலங்காரத்தில், அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட, பரமபத வாசலை கடந்து பவனி வந்தார். அவருடன் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரமபத வாசலை கடந்து வந்தும், பிரகார உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர் தொடர்ந்து கோயில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருளி, ஆழ்வார்களுக்கு காட்சியளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here