திருவாரூர், செப். 17 –
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவிக் காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஆர் பி அரசு ஏஜென்சி பெட்ரோல் பங்கில் இன்று காலை முதலே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 51 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கியும், பெட்ரோல் லிட்டர் 51 ரூபாய்க்கு வழங்கியும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர்.
இதனை அறிந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட பெரிய பெட்ரோல் கேன்களிலும் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர். தற்பொழுது பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த சூழலில் பெட்ரோல் லிட்டருக்கு 51 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விசாரிக்கும் பொழுது ஆர் பி அரசு பெட்ரோல் பங்கின் உரிமையாளர் விஜயராகவன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக வலங்கைமானில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஆறு ஆண்டுகளாக ஒரு அடிப்படை உறுப்பினராகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் மோடியின் மீது கொண்ட மாறாத அன்பும் பற்றும் கொண்டு வந்ததால் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 72 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று எண்ணி தனது பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரு 51 க்கு விற்பனை செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்.
பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வையும் பொருட்படுத்தாமல் பாதி விலைக்கு பெட்ரோல் வழங்கி வரும் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் பெட்ரோல் லிட்டருக்கு 51 ரூபாய்க்கு விற்பனையாவது காட்டு தீ போன்று பரவியதால் பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடம் பேசும் பொருளாகவும் மாறி வருகிறது.