கும்பகோணம், ஜன. 18 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவிரியாற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள தைப்பூச தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவரவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி விட்டு,  கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

        காசிக்கு நிகரான தலமான கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில்; திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாகிய மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே மண்டபத்தில் 27 நட்சத்திரங்கள் வழிப்பட்டு அருள்பெற்ற தனித்தனியான 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளது எனவே இது நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும், சந்திரன் வழிப்பட்டு பேறு பெற்றதால் சந்திரதலம் என்றும் போற்றப்படுகிறது.

      திருவாவடுதுறை, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி, சீர்காழி, சூரியனார்கோயில், திருவாய்பாடி, முதலான பரிவாரத்தலங்கள் சூழ நடுநாயமாக இத்தலம் விளங்குவதால் பஞ்சலிங்கத்தலம் என்றும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் அசுவமேத பிரகாரத்தை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனையும், கொடிமுடி பிரகாரத்தை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் வந்த பலனை அடைவர் என்பதும் வரலாறு இத்தலத்தை போற்றி திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் முதலானோர் பாடியுள்ளனர்.

        இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் . இவ்வாண்டு இவ்விழா கடந்த 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், பூதகி, யானை, சிம்மம், காமதேனு, கற்பக விருட்சம், கயிலாய, அன்னபட்சி, குதிரை, கிளி, என பல்வேறு வாகனங்களில் கொரோனா பெருந்தொற்று அரசு விதிமுறைகளின் படி, சுவாமி பிரகார உலா மட்டும் நடைபெற்றது

       விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாளான இன்று தைப்பூசத்தையொட்டி இன்று பிற்பகல், பெருநலமாமுலையம்மன் மகாலிங்கசுவாமியும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களிலும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகப்பெருமான் மூஞ்சூறு வாகனத்தில் என பஞ்சமூர்த்திகளும் காவிரியாற்றங்கரையில் தீர்த்தவாரிக்காக எழுந்தருள, அதுபோலவே காஞ்சி மடத்திற்கு சொந்தமான ஒரே கோயிலான திருவிடைமருதூர் பிரசன்னவெங்கடேசப்பெருமாள் காவிரியாற்று பாலத்திலும் மற்றும் இடம் கொடுத்த ஈசன் தாயாருடன் காவிரியின் மற்றொரு கரையிலும் எழுந்தருள திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம்  அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், முதலில் அஸ்திர தேவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து அஸ்திர தேவரை தோலில் சுமந்தபடி சிவச்சாரியார் காவிரியில் இறங்கி மும்முறை  காவிரி நீரில் முங்கி எழ தைப்பூசத்தீர்த்தவாரி; வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதே சமயத்தில், காவிரி நதியில் திரண்டு இருந்த நூற்றுக்கணக்கானோர் புனித நீராடினர் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கும், மகா தீபாராதனை செய்யப்பட்டது, இதனையடுத்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் தமிழகத்தில் வேறு எந்த கோயிலும்  தைப்பூச திருவிழா நடைபெறாத நிலையில், இங்கு மட்டுமே தைப்பூச தீர்த்தவாரி விழா இன்று நடைபெற்றதால், வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் இதனை காண திரண்டு இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here