திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் (தனி)  கலசபாக்கம், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 3 அடுக்கு முறையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 24 மணிநேரமும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்க்க வசதியாக ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அகண்ட ஒளிதிரை பொருத்தப்பட்டு அதில் காட்சிகள் திரையிடப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அந்த காட்சியை வெளியில் இருந்தபடியே அகண்ட ஒளிதிரையில் பார்க்கலாம். வெளியாட்கள் உள்ளேசெல்ல அனுமதி கிடையாது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் நேற்று திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி திரையிடப்பட்ட காட்சிகளை பார்வையிட்டார். அதேபோல் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் க.செல்வகுமாரும் சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி திரையிடப்பட்ட காட்சியினை பார்வையிட்டார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.அரவிந்த் ஆகியோரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here