கும்பகோணம், ஜன. 18 –
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் 125 ஆண்டுகளுக்கு முன்பு (1897ல்) வீரவுரை நிகழ்த்திய இடத்தில் (போர்டர் டவுன்ஹாலில்) அவர் பேசிய அதே நாளில், அதே நேரத்தில் (பிப்ரவரி 03ம் நாள் மாலை 5 மணிக்கு) ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், அவருக்கு ஆறரை அடி உயரத்தில், மூன்றரை அடி பீடத்தில் முழுவுருவ சிலை அமைப்பதற்காண பூமி பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது,
இதே போன்று, அவர் கும்பகோணத்தில் உரை நிகழ்த்திய இடம் உள்ளிட்ட மேலும் ஆறு இடங்களிலும் விரைவில் வீரத்துறவி விவேகானந்தர் சிலை அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில், பாரத பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டி கடந்த 1897ம் ஆண்டு தாயகம் திரும்பிய போது ராமேஸ்வரம், மதுரை வழியாக கும்பகோணத்திற்கு பிப்ரவரி 3ம் தேதி ரயில் மூலம் வந்து மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கிய வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு ஆற்றினார்.
எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்ற அவரது வீர முழக்கத்தை அவர் முதன் முதலில் கும்பகோணத்தில் தான் பேசினார் என்பது பெருமைக்குரியது. தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சுவாமிகள் விஜயம் செய்துள்ளார். இதனை நினைவு கூறும் விதமாக சுவாமி விவேகானந்தர் வீர உரையாற்றிய கும்பகோணம் கிளப் (எ) போர்ட்டர் டவுன் ஹாலில் அவரது முழு திருவுருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது,
இதில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் விட்டல்தாஸ் மஹராஜ், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் இராமகிருஷ்ணனர், சாரதாதேவி மற்றும் விவேகானந்தர் ஆகிய மூவர் படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட செங்கற்களை வைத்து சிலைக்கான மேடை பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சிலை அவர் 125 ஆண்டுகளுக்கு முன்பு (1897) அவர் பேசிய அதே நாளில் (பிப்ரவரி 03ம் தேதி) அதே நேரமான (மாலை 5 மணிக்கு) திறந்து வைக்கப்படவுள்ளது என்பது சிறப்பு. கும்பகோணம் காந்தி பூங்கா எதிரேயுள்ள கும்பகோணம் கிளப் (எ) போர்டர் டவுன் ஹால் முகப்புப்பகுதியில் சுவாமி விவேகானந்தர் முழுவுருவ சிலை மண்டபத்துடன் ஆறரை அடி உயரத்தில், மூன்றரை அடி பீடத்துடன் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் உருவாகி, அரசின் வழிகாட்டு நெறி முறைப்படி இதன் திறப்பு விழாவினை நடத்துவது என்றும், இதே போன்று அவர் கும்பகோணத்தில் உரை நிகழ்த்திய இடங்கள் உள்ளிட்ட மேலும் ஆறு இடங்களில் அவரது திருவுருவ சிலைகள் விரைவில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சுவாமி விவேகானந்தரின் ஆத்ம பலத்தால் இன்று ராமகிருஷ்ண மடம் சேவை பணிகளை 100 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதோடு எண்ணற்ற துறவியர்களையும் நாட்டுக்கு அளித்துள்ளது அத்தகைய ராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டுதலுடன் கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அமைக்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும் என்ற சுவாமிகளின் சிந்தனைக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் பேசினார்.
இதில் நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரமேஷ், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் விழா குழுவைச் சேர்ந்த கண்ணன், வேதம் முரளி, சத்தியநாராயணன், பாஸ்கர் முரளி, கிரி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





















