திருத்துறைப்பாண்டி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி …
திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி பாராட்டி கௌரவிக்கப் பட்டார்.
ஏற்புரையில் எழுத்தாளர் கமலா கந்தசாமி பேசியதாவது 150 க்கும் மேலான நூல்களை நான் எழுதியுள்ளேன். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிரிப்பு துணுக்குகள், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எனக்கு தமிழ் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இன்றைய தலைமுறை புத்தக வாசிப்பினை நோக்கி திரும்ப வேண்டும். தினம் தினம் நடக்கும் சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் என்று தெளிவாகிறது.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், புத்தகத்தை துணையாக கொண்டு அவர்கள் வாழ்வில் வெற்றி பெற உதவ வேண்டும். நான் எட்டு டிகிரி பெற்றுள்ளேன். நான் படித்த படிப்பை விட நான் வாசித்த புத்தகங்களை எனக்கு எழுத்தாளராக வருவதற்கான படைப்பாற்றலை ஊக்குவித்தது, அனைவரும் தொடர்ந்து வாசிப்போம்.என்றார்
விழாவிற்கு தமிழியக்க மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் கீழை கதிர்வேல், ராய் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் துரை ராயப்பன், ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனர் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி நூலகர்கள் வீரசெல்வம், சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பறவைகள் ஆர்வலர் லயன்ஸ் வேதமணி, சித்த மருத்துவர் ரவி, ஆசிரியர் பாலமுருகன், சமூக செயற்பாட்டாளர்கள் லெனின் பாபு, கமல், பேராசிரியர்கள் ராம் பிரகாஷ், விஜய சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாசகர்கள் பிரவீன், சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர். காவிரி கடைமடை .இலக்கிய வட்டத்தின் நிறுவனர் ஆசைத்தம்பி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.