சென்னை, ஆக. 21 –
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் உள்ள வஜ்ரகிரிமலையில் 1800 ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் இக் கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் கிறிஸ்தவ அமைப்பினர் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு தடுத்து நிறுத்தினர். இருப்பினும், ஆக்கிரமிப்பு தொடர்ந்ததை யடுத்து இந்து முன்னணி சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தினை சர்வே எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சர்வே எடுக்கும் பணி தாமதமாகி வருவதாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தங்களுக்கு நீதி கிடைக்காது என கூறி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இந்து முன்னணியினர் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் இந்து முன்னணி சார்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கோட்ட பொருப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் வஜ்ரகிரி மலையில் கிரிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, இந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத்தரக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கையில் இந்து முன்னணி கொடியை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.