கும்மிடிப்பூண்டி, மே. 07 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வட்டார கல்வி அலுவலர் ஜி சுதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பரமசிவன் முன்னிலை வகித்தார். பின்னர் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வில் தனலட்சுமி தலைவராகவும், சடையம்மாள் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
சுய உதவி குழுவை சேர்ந்த சுந்தரி மற்றும் 12 உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் சம்பத், அமுதா, ஆசிரியர் ஜெபக்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்ததுடன் பள்ளி வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






















