கும்பகோணம், மார்ச். 15 –
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்திற்கு பாஜக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்திற்கும் மற்றும் அப்பகுதியில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விற்கு எதிராக சோழபுரம் பேரூராட்சி பகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி காட்டி கண்டனமுழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவனை தொடர்ந்து, ஒருமையிலும், அவதூரகவும் பல்வேறு இடங்களில் எச்.ராஜா பேசி வருவதாக அக்கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பி அச்செயலை கண்டிக்கும் வகையில் இன்று கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் உள்ள பாஜக நிர்வாகி இல்லத் திருமணத்திற்காகவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வருகை தந்த எச். ராஜா விற்கு எதிராக கருப்புக் கொடி மற்றும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியவாறும் காத்திருந்தனர்.
இந்நிலையில் சோழபுரம் பகுதி பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, அங்கிருந்து சோழபுரம் காலபைரவர் கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டபோது,
சோழபுரம் கடைவீதியில் விடுதலை சிறுத்தை கட்சி பேரூராட்சி செயலாளர் கரிகாலன் தலைமையில் எச். ராஜாவை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கட்சிக்கொடியை கையில் வைத்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கையில் முட்டையை வைத்துக்கொண்டு ஹெச் ராஜா வாகனம் மீது எறிவதற்காக மறைத்து வைத்திருந்த முட்டையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



















