புதுச்சேரி:
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் அறப்போராட்ட வழியில் நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
கவர்னரை முற்றுகையிடுவதோ, அவரை தடுப்பதோ எங்களது நோக்கம் அல்ல. அவர் பயணம் செய்வதற்கு நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. அமைதி வழியில் தான் போராட்டத்தை நடத்துகிறோம்.
கவர்னரால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதுடன் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையும் இருப்பதால் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே உள்ளது. இதற்கு ஒரு தீர்வே ஏற்படவில்லை. கவர்னரின் நடவடிக்கை மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்ததால் இதுபற்றி பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, ஜனாதிபதி என பல தரப்பிலும் புகார் கொடுத்து பார்த்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கவர்னரின் முட்டுக்கட்டையால் புதுவை அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை.
இலவச அரிசி போன்ற திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. பல பணிகளும் முடங்கி கிடக்கின்றன. இனியும் பொறுத்திருக்க முடியாது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டதால் போராட்டத்தை நடத்துகிறோம்.
இது, ஹெல்மெட் விவகாரத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று கருதக்கூடாது. ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கருத்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனாலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்று சில வழிகள் உள்ளன.
நான் இது சம்பந்தமாக ஏற்கனவே கூறும்போது, மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன்பிறகு இதை அமல்படுத்தலாம் என்று கூறினேன். ஆனால், கவர்னர் உடனடியாக அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்துகிறார்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அவரே சாலையில் இறங்கி அத்துமீறல் நடவடிக்கைகளில் இறங்குகிறார். வாகனத்தில் செல்பவர்களை கீழே இறக்கி விடுகிறார்.
ஒரு போலீஸ்காரர் போல் அவரது நடவடிக்கை இருக்கிறது. இது, கவர்னர் பதவிக்கு அழகல்ல. மக்களை துன்புறுத்துவதை ஏற்க முடியாது. எனவே, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
ஹெல்மெட் விவகாரத்தில் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புகளை மதிக்கிறோம். இதில் மாற்று கருத்து இல்லை.
சில நேரங்களில் இது போன்றவற்றை அமல்படுத்துவது சற்று கடினமானது. பல மாநிலங்களில் இதை கடைபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, விழிப்புணர்வுகளை உருவாக்கிதான் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
நாங்கள் கவர்னரிடம் 39 திட்டங்கள் தொடர்பாக கோப்புகள் அனுப்பினோம். மிகவும் அவசியமாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் அதில் உள்ளன. ஆனால், அதற்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார். இது ஒன்றும் இப்போதைய பிரச்சினை அல்ல. நீண்ட காலமாகவே இது நீடித்துக்கொண்டு இருக்கிறது. எதற்குமே தீர்வு காண முடியவில்லை.
இதனால் மாநிலமும், மாநில மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இதற்காக போராடுகிறோம்.
ஒரு கவர்னராக இருப்பவர் அந்த மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். ஆனால், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதையே தனது பணியாக வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட கவர்னர் நமக்கு தேவையா? அவரை புதுவையில் இருந்து திரும்ப பெற வேண்டும்.
நாங்கள் கொடுத்துள்ள 39 கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இது, தவறு.
நீண்ட காலமாகவே கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். அவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவே இல்லை.
எனவே, நாங்கள் அவருக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இந்த போராட்டத்துக்கு புதுவை மக்கள் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.