இராசிபுரம், மார்ச். 26 –
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த சமூக மக்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதிச் சான்றிதழ், பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர். இதனால் மேற்படிப்பு படிக்க முடியாமலும், அரசின் எவ்வித சலுகை திட்டங்களும் கிடைக்காத சூழல் உள்ளது.
இந்தநிலையில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க கோரியும், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும் பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்த்திற்கு, நாமகிரிப்பேட்டை ஒன்றிய தலைவர் AK.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகேந்திரன், ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் காளியப்பன், கிளைத்தலைவர் உமா, மகளிரணி சுகன்யா உள்ளிட்ட இருபதுற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.