ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கட்சிக் கொடிகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக ஆவடி ரயில் நிலையம் வந்தனர்.அங்கு ஆவடியில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தின் நீக்கத்தை மத்தியரசு திரும்ப பெற வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமித்ஷாவை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறி அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.