மீஞ்சூர், மார்ச். 26 –
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,
தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட நகர உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் அலெக்சாண்டர் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் திமுகவை சேர்ந்த அலெக்சாண்டர் போட்டியின்றி ஒருமனதாக துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அகஸ்டின் ராஜா அறிவித்தார்.
இதையடுத்து அலெக்சாண்டர் உள்ளிட்ட திமுகவினர் மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திமுக கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.




















